கணக்கு பிணக்கு என்று கசப்பவர்கள் மத்தியில், கணக்கைக் கற்கண்டாய்ச் சொல்லிக் கொடுப்பவர் இருந்தால் எப்படி இருக்கும்...
திருவள்ளூர் மாவட்டம், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருக்கும் நாகேந்திரன்தான் அந்தக் கற்கண்டு ஆசிரியர். விளையாட்டு முறையில் கணக்கைச் சொல்லிக் கொடுக்கும் நாகேந்திரன், பயன்படுத்தப்பட்ட பொருட்களைக்கொண்டே எளிய பரிசோதனைகள் செய்து அறிவியலைச் சொல்லித்தருகிறார்.
கோழி இறகைக்கொண்டு திசையைக் கண்டறிவது, டங்ஸ்டன் இழை இல்லாத ஜீரோ வாட்ஸ் பல்பை லென்ஸாகப் பயன்படுத்துவது என்று இவரின் செயல்முறைகள் வியப்பை அளிக்கின்றன.
மீன் இரண்டு எழுத்து, அதன் இதயத்திலுள்ள அறைகளும் இரண்டு. தவளைக்கு மூன்று இதய அறைகள், அதன் எழுத்துகளும் மூன்று. அதே போல், நான்கு எழுத்துகள்கொண்ட மனிதனுக்கு நான்கு இதய அறைகள் என்று இவரின் புதிய உத்தி முறையால், மாணவர்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் விடையைச் சரியாகச் சொல்கின்றனர்.
2011-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில், இவருடைய கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்வானது. தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்ட 27 பேர்களில் இவரும் ஒருவர். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இரண்டு முறை செயல்திட்ட வழிகாட்டு நடுவராக இருந்துள்ளார்.
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களைச் சந்தித்து, கல்வியின் தேவையை எடுத்துக்கூறி, மீண்டும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார். பள்ளி செல்லாமல் இடை நிற்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து, 'சமுதாயச் சிற்பிகள்’ என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.
கணித மேதை ராமானுஜர் பிறந்தநாளான டிசம்பர் 22 அன்று ராமானுஜம் எண் 1729 என்பதைக் கொண்டு, 1729 ஸ்லைடுகளை உருவாக்கி, 'உலகிலேயே மிக நீண்ட பவர்பாயின்ட் ஸ்லைடு நிகழ்ச்சி’ (The World Longest Powerpoint Slide Show)என்ற உலக சாதனையைப் பதிவுசெய்தார். இவரின் கல்விச் சாதனைக்கு மாவட்ட நிர்வாகம், 'நல்லாசிரியர்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. விடுமுறை நாட்களில்... விளையாட்டு முறையில் கணிதம் மற்றும் அறிவியல் பயிற்சி கொடுத்தும் தேர்வு நடத்தியும், 'சிறந்த அறிவியல் ஆர்வலர்’ என்ற விருதினை மாணவர்களுக்கு வழங்கிவருகிறார்.
'மாணவர்களைக் கேள்விகள் கேட்க ஊக்குவித்தால்தான், அவர்களின் அறிவு விரியும். இதன் மூலம் மட்டுமே கிராமத்து மாணவர்களும், ஐ.ஐ.டி., போன்ற தேர்வுகளில் எளிதில் சாதிக்க முடியும்' என்கிறார் நாகேந்திரன்.
இந்தப் பகுதியில் பிறந்தவர்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர், ’என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம், எனது ஆசிரியரே’ என்று சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் அறிவியல் மேதைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் நாகேந்திரனும் ஒரு கனவு ஆசிரியரே.