ஓசோனை காக்க உங்களாலும் முடியும்!
- பானுமதி அருணாசலம் (விகடனில்..)
செப்.16,2011
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை ஃபில்டர் செய்து பூமிக்கு ஒளியை அனுப்பும் பணியை செய்து வருவது ஓசோன் படலம். இந்த ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
மனிதனின் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பினால் ஓசோன் படலம் சிதலமடைந்து வருவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என 1970-ம் வருடங்களில் விஞ்ஞானிகள் எச்சரிக்கைமணி அடித்தனர். இதனை அடுத்து 1985-ம் வருடத்தில் வியன்னாவில் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விஷயங்களை ஆராய்ந்தது.
அதன்பிறகு 1995-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக அனுசரிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. பூமியிலிருந்து சுமார் 10 முதல் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஓசோன் படலம். இந்தப் படலம் இருப்பதினால் தான் சூரிய ஒளி நேரடியாக பூமிக்கு வருவதில்லை. ஆனால், சமீபகாலமாக ரெஃபிரிட்ஜிரேட்டரிலிருந்து வெளியாகும் குளோரோஃப்ளோரோ கார்பன் மற்றும் உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைட் போன்றவைகளால் ஓசோன் படலம் வெகுவாக பாதிப்புள்ளாகிறது.
அன்டார்டிக்கா மற்றும் ஆர்டிக் பகுதிகளில் இருக்கும் ஓசோன் படலத்தில் அதிகளவில் ஓட்டைகள் இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. இதனால் பனி மலைகள் அதிகளவில் உருகும் எனவும், இந்தியாவிலும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என நாசா எச்சரித்திருக்கிறது.
தோல் வியாதிகள், பார்வை இழப்பு மற்றும் பயிர்களை பாதிக்கிறது புற ஊதாக் கதிர்கள். ஒரு குளோரோஃப்ளோரோ கார்பன் மூலக்கூறினால் ஒரு மில்லியன் ஓசோன் மூலக்கூறை அழிக்கிறது. 2000-மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 29.9 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு ஓட்டை இருந்ததாகவும், 2010-ல் 22.2 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த அளவுக்கு ஓசோனின் ஓட்டை சரியானதற்கு காரணம், உலகம் முழுவதும் இந்தப் படலத்தை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.
இன்றையச் சூழ்நிலையில் ரெஃபிரிட்ஜிரேட்டர், ஏ.சி. போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டதால் முழுவதும் தடைசெய்ய முடியாது. எனினும், தேவைக்கு மேல் பயன்படுத்தாமல் மிக மிக அவசியம் என்றால் மட்டுமே இந்தப் பொருட்களை உபயோகிக்கலாமே.
குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்கள் ஏ.சி., ஃபிரிட்ஜ் போன்றவற்றை தவிர்த்து, நம்மால் முடிந்தளவுக்கு ஓசான் படலத்தை பாதுகாப்போம்.
வருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச் செல்வோம்!